கடந்த 25 ஆண்டுகளாக நான் பதிவு செய்த நேர்காணல்களின் தொகுப்பு இது. நான் நேர்கண்ட ஆளுமைகளில் சிலர் இப்போது உயிரோடு இல்லை. அதனால் இந்தத் தொகுப்பு மேலும் பெறுமதி கொண்டதாகிறது.
ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் நடத்திய மாநாட்டுக்காக டெல்லிக்குச் சென்றிருந்த நேரத்தில் அங்கு வந்திருந்த மும்பையைச் சேர்ந்த டீஸ்டா செடல்வாட், காஷ்மீரிலிருந்து வந்திருந்த இம்ரோஸ் பர்வேஸ், பஞ்சாப்பிலிருந்து வந்திருந்த ஹர்ஷிந்தர் சிங் ஆகியோருடைய நேர்காணல்களைப் பதிவு செய்தேன். அவர்கள் எல்லோருமே மிக முக்கியமான மனித உரிமைப் போராளிகளாக பின்னர் உருவெடுத்தனர்.
திரு ஃபிரான்ஸுவா குரோவின் நேர்காணல் மிக முக்கியமானது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் ஆய்வுகளுக்கு ஆக்கப்பூர்வமான பல பங்களிப்புகளைச் செய்த மிகப்பெரிய ஆளுமை அவர். அவரிடம் பதிவுசெய்யப்பட்ட ஒரே விரிவான நேர்காணல் இது மட்டும்தான்.
ஈழத்தைச் சேர்ந்த இலக்கிய ஆளுமைகள் டொமினிக் ஜீவா,நந்தினி சேவியர், வ.ஐ.ச.ஜெயபாலன் ஆகிய மூவரது நேர்காணல்களிலும் ஈழத்தில் இப்போதும் பெரிய சிக்கலாக இருக்கும் சாதிய சிக்கல் பேசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஈழத் தமிழ்ச் சமூகம் குறித்தும், அங்கு நடந்த ஆயுதப் போராட்டம் குறித்தும் வெகுசனப் பரப்பில் கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பத்துக்கு மாறானதொரு பிம்பத்தை இவை வழங்குகின்றன.
இந்த நேர்காணல்களைத் தொகுப்பாக படிக்கும்போது கடந்த 25 ஆண்டு கால இடைவெளியில் இதில் இடம்பெற்றுள்ள ஆளுமைகளின் வளர்ச்சியை மட்டுமின்றி, தமிழ்ச் சமூகம் எப்படியெல்லாம் உருமாறி வந்திருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.
– ரவிக்குமார்
Reviews
There are no reviews yet.