வரலாற்றில் பிழைகள் பல நடந்ததுண்டு. அவற்றில் சிலவற்றிற்காவது தவறு செய்த நாடுகள் / அரசுகள் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளன. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டிஷ் அரசு பல வருடங்கள் கழித்து வருத்தம் தெரிவித்தது.
நீதிமன்றங்கள் மனித உரிமைகளைப் பறிக்கும்படியான தங்களது தீர்ப்புகளுக்கு வருத்தம் தெரிவித்ததில்லை. நெருக்கடிநிலையின்போது ‘மனித உரிமைகள் மீறினாலும் நீதிமன்றங்களை அணுக முடியாது. அடிப்படை உரிமைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன’ என்று உச்சநீதிமன்றம் அளித்த ஏ.டி.எம்.ஜபல்பூர் என்ற வழக்கு சட்டநிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு ஒரு முறை உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புகூட கேட்டார். ஆனால் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆதார் அட்டையின் சட்டப்பூர்வ தன்மையை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏ.டி.எம்.ஜபல்பூர் தீர்ப்பு தவறு என்று அறிவித்தது (புட்டசாமி, 2018).
நெருக்கடி நிலைமையைப் பிரகடனம் செய்ததே தவறென்றும், அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் அறிவிக்க வேண்டும் என்று 44 ஆண்டுகளுக்குப் பின் போடப்பட்ட வழக்கை சமீபத்தில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
சமூகக் கொடுமைகளின் வரலாற்றில் உலகம் முழுவதும் பதிவாகிவிட்ட கீழ்வெண்மணிப் படுகொலை வழக்கின் அநீதியை நீதிமன்றங்கள் இன்றுவரை களையவில்லை. அடித்தள மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டுமென்றால் கீழ்வெண்மணி வழக்கில் அளித்த தீர்ப்பு தவறு என்பதை உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் அறிவிப்பதே அம்மக்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். செய்வார்களா?
நீதிபதி கே.சந்துரு
Reviews
There are no reviews yet.