தான்சார்ந்த பலருக்கும் அரசியல் இயக்கம் என்பதை சமத்துவம், சமநீதிக்கான செயல்பாடு, அதிகாரப் பகிர்வு என்று புரிந்துகொள்வதும், அதைத் சூழலுக்கு ஏற்ப அர்த்தப்படுத்திக்கொண்டு இயங்குவதும் சாத்தியமாகிறது. ஆனால், ஏன் சமத்துவத்திற்காகவும், சமநீதிக்காகவும் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது, அவை ஏன் தன்னியல்பாக மானுட சமூகங்களால் கண்டு அடையப்படுவதில்லை, எத்தகைய ஆற்றல்கள் அவற்றிற்கு எதிராக இயங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்கு, வரலாற்றில் மானுடகூட்டியக்கத்தை வைத்துப் பார்ப்பது இன்றியமையாதது.
உலக அளவில் பலகாத்திரமான கேள்விகளை எழுப்பி, அதிகாரத்தின் செயல்பாடுகளைக் குறித்து சிந்தித்தவர்களுள் மிஷேல்ஃபூக்கோ, எலியா கனெட்டி, எட்வர்ட் ஸெய்த் ஆகியவர்கள் முக்கியமானவர்கள். பலசமயங்களில் இத்தகைய சிந்தனையாளர்களின் முழு நூல்களைவிட, சிறிய கட்டுரைகளிலும், நேர்காணல்களிலும் பல தரிசனம் மிக்க வரிகள் அமைந்துவிடும். உதாரணமாக, இந்நூலில் இடம்பெற்றுள்ள ஃபூக்கோவின் ‘தன்னிலையும் அதிகாரமும்’ கட்டுரை அத்தகையது.
சமகால அரசியலைப் புரிந்துகொள்ள மிகப்பெரிய பங்களிப்பை ஒரே கட்டுரை செய்யமுடியுமென்றால் அது இந்தக் கட்டுரைதான் எனலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்களைக் கோர்ப்பதுபோல இம்மூன்று சிந்தனையாளர்களின் காத்திரமான சிறிய கட்டுரைகளை மொழியாக்கம் செய்து தொகுத்துள்ள ரவிகுமாருக்கு தமிழ்ச் சமூகம் கடமைப் பட்டுள்ளது. இவ்வகையில் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினரை. அரசியல்வாதியைப் பெற்றிருப்பது தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பது. ல
சிறிய கட்டுரைகளானாலும் இவற்றை உள்வாங்குவதற்குப் பன்முறை வாசிப்பதும், தொடர்ந்த வாசிப்புப் பயிற்சியும் அவசியம். இக் கட்டுரைகளில் பொதிந்திருக்கும் அற்புதமான சிந்தனைத் திறப்புகளைக் கண்டடைவது, அரும் புதையல்களைக் கண்டடைவதற்கு ஒப்பானதாகும். இந்நூல் வாசகர்களிடம் கோருவது அதைத்தான்.
ராஜன் குறை
எழுத்தாளர், பேராசிரியர்
Reviews
There are no reviews yet.