ரவிக்குமார் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு, அரசியல் என்ற பல துறைகள் பற்றிய நுண்ணிய பதிவுகளைக் கொண்டதாகத் திகழ்கிறது. மொழி பற்றிய வரலாற்றுப் பார்வைகளையும், மொழி வளர்ச்சி பற்றிய அவரது கவலைகளையும் ‘செம்மொழிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்: ஷெல்டன் பொல்லாக்கின் ஆய்வை முன்வைத்துச் சில குறிப்புகள்’, ‘தமிழும் சமஸ்கிருதமும்: முற்றுப் பெறாத போராட்டம்’ என்ற கட்டுரைகள் சொல்கின்றன.
‘மீண்டும் ராமாயணம்: ஏ.கே.ராமானுஜனின் கட்டுரையும் இந்துத்துவ எதிர்வினையும்’ இந்தியாவில் இலக்கியத்தை மையமிட்டு நடக்கும் அரசியலைப் பேச ‘ஆயிரம் பூக்கள் கருகட்டும்’ என்ற கட்டுரை தமிழுக்கு அப்பால் சீனம் போன்ற மொழிகளில் நடக்கும், இலக்கிய அரசியலைத் தமிழர்கள் சிந்தனைக்குக் கொண்டுவருகிறது.
‘சொற்களின் மௌனம் பிம்பங்களின் எழுச்சி: அம்பேத்கர் கார்ட்டூன் குறித்து சில சிந்தனைகள்’ என்ற கட்டுரை வரலாறெழுதியல் என்ற பெயரில் பாடநூல்களில் நஞ்சைக் கலக்கும் வரலாற்று வன்கொடுமை ஒன்றை நாசூக்காகச் சொல்கிறது. ‘ஜல்லிக்கட்டு என்னும் கலாச்சார மூலதனம்’ என்ற கட்டுரை ஆழ்ந்த நுட்பமான சுருக்கமான கட்டுரை சமூகவியல் உண்மையைப் பேசுகிறது.
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் ஆழ்ந்த அறிவுச் செழுமையோடு எளிமையாக அமைந்து தமிழால் ஆழமான செய்திகளையும் எளிமையாகச் சொல்ல முடியும் என்பதைக் காட்டுகின்றன.
ரவிக்குமார் தனித்துவமுடைய சிந்தனையாளர். தீவிர அரசியல் சமுகச் செயல்பாட்டாளர். தமிழ்ச் சிந்தனை மரபு பற்றிய பல துறை அறிவுடையவர். உலக அரசியல் சமுகப் பண்பாட்டு நிகழ்வுகளை நுட்பமாகக் கற்றுத் தேர்ந்து தமிழ்ச் சமுகத்தை அவ்வறிவு கொண்டு நடுநிலையோடு சீர்தூக்குபவர். அவர் எழுதியுள்ள இந்நூல் தற்காலக் கட்டுரையாளர்கள் மொழிச் செப்பத்திற்கும், கருத்துச் செழுமைக்கும் முன்மாதிரியாகக்கொள்ள வேண்டியதாகும். தமிழ் அறிவுலகம் இந்நூலை வரவேற்றுக் கற்றுப் பயனடைய வேண்டும்.
– பேராசிரியர் கி.நாச்சிமுத்து
Reviews
There are no reviews yet.