இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஐந்து பெண்களும் வரலாற்றைத் தனித்துவமான பார்வையோடு எழுதியவர்கள்.
வரலாற்றறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் மாணவியான சி.மீனாட்சி பல்லவர்கால வரலாற்றை எழுதியவர்களில் முக்கியமானவர் ஆவார்.
கலை வரலாற்றறிஞர் வித்யா தெஹிஜியா இந்தியக் கலைகளின் தனித்துவத்தை உலக அளவில் எடுத்துச் சென்றவர். பௌத்த கலைகள் குறித்தும், சோழர்கால செப்புப் படிமங்கள் குறித்தும் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதுமட்டுமின்றி பாலின நோக்கில் இந்திய கலைகளை அவர் ஆராய்ந்திருக்கிறார்.
அதிகம் அறியப்படாத பொருளாதார வரலாறு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவர் தர்மா குமார். தென்னிந்தியாவில் நிலமும் சாதியும் குறித்த அவரது முனைவர்பட்ட ஆய்வு புகழ்பெற்ற ஒன்றாகும். நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு 1948ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியில் பணியில் சேர்ந்த அவர், பின்னர் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். உலக அளவில் பொருளாதார வல்லுநர்களால் மதிக்கப்படும் ஆய்விதழான ‘இண்டியன் எகனாமிக் அண்ட் சோஷியல் ஹிஸ்டரி ரெவியூ’வை நிறுவியவர்களில் அவரும் ஒருவராவார்.
இந்திய வரலாறு எதுவானாலும் அதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய வரலாற்று நூல்கள் பலவற்றை எழுதியவர் ரொமிலா தாப்பர். இந்தியாவின் தொன்மைக்கால வரலாறு குறித்த அவரது நூல் வரலாற்று மாணவர்களின் பாடநூலாகத் திகழ்கிறது. அத்துடன் ஒரு வரலாற்றறிஞராகத் தொடர்ந்து தனது சமகால நிகழ்வுகளின் மீதும் தனது கருத்துகளை முன்வைத்துவருகிறார்.
இனவாதம் லட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டிருக்கும் இலங்கையில் வாழும் முக்கியமான வரலாற்றறிஞர் குமாரி ஜெயவர்த்தனெ. இனவாத அரசியல் குறித்து 1980களின் ஆரம்ப காலத்திலேயே எச்சரித்தவர்.
Reviews
There are no reviews yet.