Sale

90.00

தமிழியலுக்கு ரவிக்குமாரின் பங்களிப்பு

1980களின் பிற்பகுதி முதல் தமிழ்ச் சிறு பத்திரிகைச் சூழலில் இயங்கிவரும் ரவிக்குமார், தமிழ் அறிவுச் சூழலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிறப்பிரிகை இதழின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர். 1997இல் தலித் இலக்கியத்துக்கென அவர் ஆரம்பித்த ‘தலித்’ என்ற சிற்றிதழ் இந்த ஆண்டு (2022) வெள்ளிவிழா கண்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு வரலாற்று ஆய்வுகளுக்கென ‘தமிழ் போதி’ என்ற இருமாத இதழை ஆரம்பித்தார். இப்போது அது மாத இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. 2010ஆம் ஆண்டு முதல் மணற்கேணி என்ற ஆய்வு இதழை நடத்திவருகிறார். அது UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ் ஆகும். உலகப் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்கள் அந்த இதழில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகின்றனர். தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு அது அரியதொரு கருவூலமாகத் திகழ்ந்து வருகிறது. இதுவரை 60 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ரவிக்குமார் எட்வர்ட் செய்த், மிஷேல் ஃபூக்கோ, எலியா கனெட்டி, உள்ளிட்ட மிக முக்கியமானச் சிந்தனையாளர்களின் படைப்புகளைச் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் மொழிபெயர்த்து அறிமுகம் செய்தவர். அந்தச் சிந்தனையாளர்களின் கோட்பாடுகளைப் பயன்படுத்தி பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். தமிழ் அறிஞர்களின் நினைவாகவும், பொருந்தல் முதலான தொல்லியல் அகழ்வாய்வுகள் குறித்தும், தமிழும் சமஸ்கிருதமும் உள்ளிட்ட முக்கியமான பொருண்மைகள் குறித்தும் அவர் நடத்திய ஆய்வரங்குகள் தமிழியலைச் செழுமைப்படுத்தியுள்ளன. தனது ஆய்வுகள், தான் நடத்தும் பத்திரிகைகள், மொழிபெயர்ப்புகள், ஆய்வுக் கருத்தரங்குகள் – இப்படித் தமிழியலுக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துவரும் ரவிக்குமாரின் பணிகளை மதிப்பிட்டுப் பாராட்டும் விதத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத் தமிழ்ப்பிரிவின் சார்பில் ஜூலை 4, 5, 6 ஆகிய நாட்களில் இணையவழிக் கருத்தமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.