சவுத்பரோ கமிட்டியின் அறிக்கையைத் தொடர்ந்து, மார்ச் 1920இல், சத்யசோதக் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமண மதத்தைச் சேர்ந்த அப்பாசாகேப் பாட்டீலை, கோலாப்பூருக்கு அருகிலுள்ள மங்காவ் என்ற கிராமத்தில் தலித் உரிமைகளுக்காக ஆதரவு திரட்டுவதற்காக மாநாடொன்றை நடத்துமாறு ஷாஹு மகாராஜ் ஊக்குவித்தார். சுமார் 5,000 தலித்துகள் கலந்து கொண்ட அம்மாநாட்டிற்கு அம்பேத்கர் தலைமை தாங்க அழைக்கப்பட்டார். அவரது உரை பார்வையாளர்களை மிகவும் நெகிழ வைத்தது. இதனால் ஊக்கமடைந்த கணேஷ் அக்காஜி கவாய், ஜூன் 1920இல் நாக்பூரில் மற்றொரு மாநாட்டை ஏற்பாடு செய்து, அம்பேத்கரை ஒரு பார்வையாளராக அழைத்தார். ஆனால் அங்கு அம்பேத்கருக்குப் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, அங்கு அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதிகளை நியமிப்பதன் ஆபத்துகளை விளக்கினார். தலித்துகள் ஒருபோதும் தலித் அல்லாதவர்களால் அரசியல் ரீதியாக வழிநடத்தப்படக்கூடாது என்றும், ஒரு தலித் தலைவரால் மட்டுமே தலித் சமூகத்தின் பிரச்சினைகளை உண்மையிலேயே புரிந்துகொண்டு தீர்க்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“தீண்டப்படாதவர்களால் வழி நடத்தப்படாத நிறுவனங்களும், தீண்டப்படாதார் அல்லாத தனிநபர்களும் தீண்டப்படாதாரின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது” என அம்பேத்கர் பிரகடனம் செய்தார்.
1920இல் பம்பாய் மாகாணத்தில் நடந்த இந்த இரண்டு மாநாடுகளும் அம்பேத்கரின் அரசியல் பயணத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் தலித் இயக்க வரலாற்றிலும் திருப்புமுனையாக அமைந்தன. இந்த நூல் அந்த மாற்றத்தின் சான்றாகத் திகழ்கிறது.
ரவிக்குமார்
Reviews
There are no reviews yet.