புதுமைப்பித்தன் கதைகளில் மூட்டைப் பூச்சிகள் ‘அபிவாதயே’ சொல்லும். அதைப் போல், தேன்மொழியின் கதைகளில் மரப்பாச்சி கலகக்காரியாக வருகின்றது. உச்சியை இழந்த நெட்டைப் பனைமரம், ஆடைப் பூச்சு ஏதுமற்ற ஆதித் தாய் ஏவாளாகக் கட்டற்று விடுதலையின் உருவகமாகத் தோற்றம் கொள்கின்றது. ‘சத்து உரிந்த வார்த்தைகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டன’ என்கிறது இவருடைய மரப்பாச்சி. ஆனால், தேன்மொழியின் வார்த்தைகள் அனைத்தும் சுடுசரம் ஒக்கும், சாணைத் தீட்டப்பட்ட கூர்மையான சொற்களாக ஒளிர்கின்றன.
இந்தக் கதைகள் இவரைத் தனித்து அடையாளம் காட்டும் குரலாக ஒலிக்கின்றன. சாட்சி நிலையில் நின்று, உணர்ச்சி வயப்படாமல், எந்தவிதமான மதிப்பீட்டு அறிவுரைகளும் வழங்காமல், வாழ்க்கையின் ‘நகைமுரணை’, (Irony) அழகியல் விரவிய நாகரிகக் குரலில் (sophisticated), உரைநடைக் கவிதையாக, மனிதாபிமானக் கதைகள் சொல்லும் தேன்மொழி, தமிழின் எதிர்காலம்.
-இந்திரா பார்த்தசாரதி
உணர்வுகள், உறவுகள், அகம், புறம், மனிதர்கள், மிருகங்கள். உயிருள்ளவை, உயிரற்றவை இவை அனைத்தும் ஒன்றிப் பிணைந்து வாழ்க்கையுடன் கலக்கும் மாயம் தேன்மொழியின் எழுத்தில் இருக்கிறது. பாம்புகள், ஓவியங்கள், நாணல் காடுகள், பாலைவனங்கள், குதிரைகள், பூக்கள், பழங்கள். பேய்கள் கூட எளிதாக உருமாறி நம் அருகே வருகின்றன. அன்பைத் தருகின்றன; அன்பை யாசிக்கின்றன. உடல் நலிவுற்று மகளுடன் தங்கி பாசத்தையும் தொல்லையையும் தரும் அப்பா, கதை சொல்லும் ஆத்தாக்கள், சோறு பொங்காமல் பனிரெண்டு வயதுப் பெண்ணிடம் ‘போய் வாரேன், பத்திரமா இரு’ என்று கூறி வீட்டை விட்டுப் போய்விடும் கோபக்கார அம்மாக்கள், சைக்கிள் ஓட்டத் தெரியா கணவனுடன் டபுள்ஸ் போய் வாழ்க்கை எல்லாம் விழுந்து எழுந்தும், பாதுகாப்புத் தரும் நாணல் காடாய் அவனை உருவகித்து அவனைக் காதலிக்கும் மனைவி, மனைவிக்கு எந்த ஊறும் நேராதபடி சாராயம் காய்ச்சும் கணவனை இழந்தபின் மகன்களும் பேரன்களும் அவளைச் சாராய வழக்கில் மாட்டிவிட்டதும் ஊமத்தைக் காய்களை இடுப்பில் கட்டிக்கொண்டு தனி நடை போகும் கிழவி, உறவாட வரும் பேய்கள் என்று அலை பொங்குவது போல எளிதாக மேலே ஓங்கிழங்கி எழும் கதைகள் இவை. மெத்தென்று சில சமயத்திலும் அசுர வலியுடன் சில சமயங்களிலும் மனத்தை முட்டும் கதைகள். இக்கதைகள் உருவாக்கும் உலகை விட்டு வெளியே வந்த பிறகும் அது இதமாயும் இம்சை தந்தபடியும் நம்மைத் தொடருகிறது.
– அம்பை
Reviews
There are no reviews yet.