எழுத்தாளர் ரவிக்குமாரின் இந்தக் கட்டுரை திரட்டு உலக அளவிலான சமூக, அரசியல் பொருளாதாரம், பண்பாடு மற்றும் வாழ்வியலின் உட்கூறுகளை ஒரு பரந்துபட்ட பார்வையுடன் நம்முன் படைக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து தொல்குடிகளான நரிக்குறவர்களின் வாழ்வியல் மற்றும் அதன் சிக்கல்கள் வரை தன் தனித்துவமான மொழி ஆளுமையின் மூலம் அவர் எழுதியுள்ளார். இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பல இன்றைய சூழ்நிலைக்கும் ஏற்புடையதாக அன்றே அவரால் படைக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் நுணுக்கமாகவும், ஆழ்ந்த புரிதலுடனும், நல்ல பல வரலாற்று, சமூகத் தரவுகளை மையமாகக்கொண்டும் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் அன்றைய காலகட்டத்தில் நடந்தேறிய முக்கிய நிகழ்வுகளின் காலப் பெட்டகமாகவும் இருக்கின்றன. ரவிக்குமாருக்கு அழகியல், இலக்கியம், மொழி, பண்பாடு ஆகியவற்றின்மேல் உள்ள ஆளுமை என்பது நிறப்பிரிகை காலந்தொட்டு அவரிடம் தொடர்ந்து இருந்துவந்துள்ளது. இதை அவரின் எழுத்துகளைப் பின்தொடர்பவர்கள் இன்றைய பின் நவீனத்துவ காலகட்டத்திலும் உணரலாம்.
அவரின் இந்த நீண்ட நெடிய இலக்கியப் பயணத்தில் காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்ட பல பிம்பங்களை உடைத்ததாக இருக்கட்டும்; ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுமுறையைச் செவ்வியல் தளத்திற்கு நகர்த்தியதாகட்டும் ரவிக்குமாரின் ஆளுமை தமிழ் மொழிக்கும் அதன் இலக்கியத்திற்கும் ஒரு புதிய பரிணாமத்தை, வளத்தைக் கொடுத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
எதையும் ஆழ்ந்து வாசித்து, சிலாகித்து, சிந்தித்து தரவுகளின் அடிப்படையில் படைக்கும் போது காலம் கடந்து நிலைக்கும் படைப்பாக அது மாறிவிடுகிறது. ரவிக்குமாரின் இந்தத் தொகுப்பும் அதுபோன்ற ஒன்றுதான்.
-இரா. இளங்கோவன்
இணை ஆசிரியர்
ஃப்ரண்ட்லைன்
Reviews
There are no reviews yet.