சற்றே விலகி
நந்தி வழி விட்டதுபோல்
வெலிக்கடையின் சிறைக்கூட
இருப்பு நெடுங்கதவம்
தானே திறக்கும்
அங்கே
காவலர்கள் அறியாமல்
கற்சுவர்கள் சூழ்கின்ற
அறைகட்குள் கொலை நடக்கும்
பகுத்தறிவு ஆளுகிற
புதிய யுகம்
அற்புதங்கள்
ஒருக்காலே நடந்தாலோ
ஒப்பார்கள் என்பதனால்
இருகால் நடந்தேறும்
கண்டு அலுத்த
கற்சுவரோ மௌனிக்கும்.
———–
திருகோணமலையில் வசிக்கும் சி.சிவசேகரம் இரண்டாம் உலகப் போரின்போது யாழ்ப்பாணம் இணுவிலில் 20.11.1942 இல் பிறந்தார். திருகோணமலை புனித மரியாள் பாடசாலையிலும், இந்துக் கல்லூரியிலும் கொழும்பு ராயல் கல்லூரியிலும் கல்வி பயின்று, 1964இல் இலங்கைப் பல்கலைக்கழகப் பொறியியல் பட்டதாரியானார். அடுத்து அப்பல்கலைக்கழக விரிவுரையாளராகி 1970இல் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்று பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி 2018இல் ஓய்வுபெற்றார். இடையில், 1984 முதல் 1997 வரை லண்டன் இம்பீரியல் கல்லூரியில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றினார்.
1970 ஆம் ஆண்டு முதல் கவிதை எழுதிவரும் இவர், 10 கவிதைத் தொகுதிகளும், 4 கவிதைத் தமிழாக்க நூல்களும், 2 இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைத் தொகுதிகளும், நாடக நூல்களும் மொழியியல் சமூக அரசியற் கட்டுரைத் தொகுப்புக்களும் என நாற்பது தமிழ் நூல்களைப் படைத்துள்ளார். அண்மையில் இவரது கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக வெளியாகியுள்ளது.
இவரது மனைவி பிரேமளாவும் மகன் மணிமாறனும் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஆவர்.
Reviews
There are no reviews yet.